.webp)
-553320.jpg)
COLOMBO (News1st) கடந்த 22 நாட்களில் விஷ போதைப்பொருட்களைப் பயன்படுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதிக்குள் 135 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 15 சாரதிகள் மற்றும் பாதசாரிகள் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
விஷ போதைப்பொருட்களைப் பயன்படுத்திய சாரதி தொழிலில் ஈடுபடும் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த உள்ளதாகவும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சட்டத்தை அனைவருக்கும் சமமெனக் கருதி செயற்படுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சாரதிகளைப் பரிசோதனைக்குட்படுத்தவும் சுற்றிவளைப்புகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தேவையான வசதிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தமது பஸ் ஊழியர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி பரிசோதனை முறைக்கு மேலதிகமாக உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதிக்கும் முன்னோடி திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக, தேவைப்பட்டால் சட்டங்களைத் திருத்தவும் சோதனைகளுக்கு அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
