.webp)
-553314.jpg)
COLOMBO (News1st) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
2026 ஜனவரி மாதம் அளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இந்த மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்குகள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வழக்குகளில் 1683 வழக்குகள் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிகளவிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 442 ஆகும்.
இவற்றில் 101 வழக்குகள் இந்த மாதத்திற்குள் காலி மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
குருணாகல் மேல் நீதிமன்றத்தில் 423 வழக்குகளும் கண்டி மேல் நீதிமன்றத்தில் 414 வழக்குகளும் பதுளையில் 206 வழக்குகளும் களுத்துறையில் 229 வழக்குகளும் கேகாலையில் 206 வழக்குகளும் மாத்தறையில் 216 வழக்குகளும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த வழக்குகள் தொடர்பிலான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட தினம், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தினம் தொடர்பான தகவல்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
