பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்த ICC

T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் மாற்றமில்லை - ICC

by Rajalingam Thrisanno 21-01-2026 | 8:05 PM

Colombo (News1st) இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாதெனவும் போட்டித் தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாடாதிருக்க பங்களாதேஷ் எடுத்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதிநிதிகள் ஒன்லைன் ஊடாக கலந்துரையாடியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரினதும் பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அதன் இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.