உயர் மட்டப் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்

உலகப் பொருளாதார மன்றத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர்

by Staff Writer 21-01-2026 | 5:20 PM

Colombo (News1st) இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றுவரும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உலகப் பொருளாதார மன்றத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச பங்களிப்பிற்கான ஆணையாளர் ஜோசப் சிகேலாவுடன் (Jozef Síkela) இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பிரதமர் இலங்கை - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் இருதரப்பு பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் மசாடோ காண்டாவினை (Masato Kanda) WEF காங்கிரஸ் மையத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான உறவு, எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, menzies airlines நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரியுடன் (Hassan El Houry) கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், விமான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றத்திற்கு இணையாக நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா மன்றத்தின் உயர் மட்ட கலந்துரையாடலிலும் பிரதமர் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் நிதி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

உலகப் பொருளாதார மன்றத்தின் 56-ஆவது வருடாந்த மாநாடு சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஆரம்பமாவுள்ளது.