.webp)

Colombo (News 1st)
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் எஸ்.எம் சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் நாடாளவிய ரீதியில் 31,218 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
05 அமைச்சுக்கள் மற்றும் 09 மாகாண சபைகளினூடாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டில் சாதகமான முறையில் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களாக நிலவிய சிக்கலான சூழ்நிலையினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த 2,500 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 ஆம் வருடத்திற்காக 5000 மில்லியன் ரூபா வீடமைப்பு, நிர்மாணிப்பு, நீர் வழங்கல் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளினாலேயே வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் தேவையான தொழில்நுட்ப உதவிகள் பிரதேச செயலகங்களின் தொழிநுட்ப அதிகாரிகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன.
வீடமைப்பு திட்டத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு 02 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 795 வீடுகளையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 153 வீடுகளையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 36 வீடுகளையும் மன்னார் மாவட்டத்தில் 79 வீடுகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 480 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 387 வீடுகளையும் வவுனியா மாவட்டத்தில் 324 வீடுகளையும் அம்பாறை மாவட்டத்தில் 246 வீடுகளையுமாக மொத்தமாக 2500 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் 2,500 வீடுகளை நிர்மாணித்து நிறைவு செய்ததன் பின்னர் எஞ்சிய வீடமைப்பு தேவையை 2027 முதல் 2029 வரையான 3 வருட காலப்பகுதிக்குள் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை J 318 கிராம சேவையாளர் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று காலை நாட்டினார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
அனைத்து துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்வை இதனைவிட மேம்படுத்துவதே தமது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு எனவும் நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
