அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வரும் தரம் 06-இற்கான பாடத்திட்ட சீர்திருத்தம்

by Staff Writer 13-01-2026 | 5:59 PM

Colombo (News 1st) தரம் 06-இற்கான கல்வி சீர்த்திருத்தம் அடுத்த வருடமே மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை கூறினார்.

அத்துடன் தரம் ஒன்றுக்கான புதிய கல்வி சீர்த்திருத்தம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தரம் 06 ஆங்கிலப் பாட மொடியூலில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து மொடியூலில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் கல்வியமைச்சின் விசாரணை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வித்துறையிலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

அத்துடன் தரம் 06 மாணவர்களுக்கான ஆங்கில பாட மொடியூலை மீளாய்வு செய்ய அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தரம் 06 ஆங்கில பாட மொடியூலில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.