பாதுகாப்பு குறித்த அமைச்சுசார் ஆலோசனை குழு கூட்டம்

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனை குழு கூட்டம்

by Staff Writer 08-01-2026 | 12:22 PM

Colombo (News 1st) 10ஆவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று(07) கூடியது.

வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

திருகோணமலை, மனையாவெளி பகுதியில் உள்ள 'செண்டி பே' கடற்கரையை பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஒலுவில் துறைமுகத்தை சுற்றியுள்ள மண்ணரிப்பு பிரச்சினை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகள், ஐ.நா. அமைதிப்படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.