.webp)

Colombo (News 1st) வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக இன்று(08) முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் கிழக்கு கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் அல்லது மீண்டும் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த, மதுரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
