கடும் காற்றுடன் பலத்த மழை

கடும் காற்றுடன் பலத்த மழை - மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

by Staff Writer 19-12-2025 | 7:13 PM

Colombo (News 1st) மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என 

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும் என்பதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும் என திணைக்களம் கூறியுள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்று(19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் உடுதும்பர பகுதியில் 201 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

போபிட்டியவில் 155 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் நுகதென்ன பகுதியில் 137 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தோட்டை ஹூனுகல்வத்த பகுதியில் 129 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் உடுதும்பர பல்லேவல பகுதியில் 127 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழைபெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கண்டி மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுதும்பர மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளில் 2 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட பூகோளவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எனவும் உத்தியோகபூர்வ மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாக வெளியிடப்படும் தகவல்களுக்கு அமைவாக தீர்மானங்களை எடுக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகோளவியலாளர் பொதுமக்களுக்கு அறிவுத்தல் விடுத்துள்ளார்.