அனர்த்தத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார பிரிவு விளக்கம்

by Staff Writer 04-12-2025 | 5:54 PM

Colombo (News1st) நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து தொற்றுநோய்கள் பரவும் அபாயம் குறித்து சுகாதார பிரிவு விளக்கமளித்துள்ளது.

05 விதமான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியன பத்திரன தெரிவித்தார்.

நீரின் மூலம் பரவும் நோய்கள், எலி காய்ச்சல், சுவாச நோய்கள், தோல் நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நோய் நிலைமைகளால் இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கினால் Typhoid மற்றும் Hepatitis ஏற்படக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இவற்றை தடுக்கும் விதமாக, கொதித்தாறிய சுத்தமான குடிநீரை பருக வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவுகளை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் வலியுத்தினார்.

தமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நிலைமைகள் தொடர்பில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமெனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அத்துல லியன பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.