Bell 212 ஹெலிகொப்டர் விபத்து : விசாரணைக்கு குழு

விபத்திற்குள்ளான Bell 212 ஹெலிகொப்டர் : விசாரணைக்கு குழு

by Staff Writer 01-12-2025 | 5:50 PM

Colombo (News 1st) இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Bell 212 ரக ஹெலிகொப்டரொன்று விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், சிலாபம் லுணுவில பாலத்திற்கு அருகில் நேற்று(30) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன்போது ஹெலிகொப்டரிலிருந்த ஐவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாப்பிட்டிய உயிரிழந்துள்ளார்.

42 வயதான அவர் ஹெலிகொப்டரை செலுத்துவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த இலங்கை விமானப்படையின் விமானி ஆவார்.

இரத்மலானை விமானப்படை முகாமில் கடமையாற்றிய அவர், தனது சேவைக் காலத்தில் 3000 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் விமானப் பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த அனர்த்தத்தில் காயமடைந்த ஏனைய நால்வரும் மாரவில வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.