களனி தெற்கு கரையிலுள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்

களனி கங்கையின் தெற்கு கரை நீர் மட்டம் மேலும் உயர்வு ; சூழவுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 01-12-2025 | 10:58 AM

Colombo (News 1st) களனி கங்கையின் தெற்கு கரையின் வௌ்ள கட்டுப்பாட்டு அணையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அணையின் நீர்மட்டம் உயர்வடைந்திருப்பதை பார்வையிட வருகைதர வேண்டாமெனவும் நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, களு கங்கை, மல்வத்து ஓயா, அத்தனகளு ஓயா ஆகியன தொடர்ந்தும் சிறுவௌ்ள மட்டத்தில் உள்ளதாக  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சிறிய அளவில் வான்பாயும் மட்டத்தை எட்டியிருப்பதால் அந்த நீரை விடுவிப்பதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படாதெனவும் நீர் கட்டுப்பாட்டு செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு நேற்று(30) உடைப்பெடுத்த நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதேவேளை, 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.