.webp)

Colombo (News 1st) கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த மண்டலம் அடுத்து வரும் 30 மணித்தியாலங்களில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் எதிர்வரும் நாட்களில் நாட்டில் மழை மற்றும் காற்றின் தன்மையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அதிக மழை காரணமாக கல் ஓயா, மாதுரு ஓயா, யான் ஓயா, முந்தெனி ஆறு உள்ளிட்ட ஆறுகளை சூழவுள்ள பகுதிகள் சிறியவிலான வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரதான நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட 50-க்கும் அதிக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதிக மழை காரணமாக போவதென்ன நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் இன்று(26) முற்பகல் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக அம்பன பாலம் நீரில் மூழ்கியுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் கடமைநேர பொறியியலாளர் புத்திக நவரத்ன தெரிவித்தார்.
உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அம்பன் கங்கையின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கனமழை காரணமாக இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதுடன் தம்புலு ஓயாவிற்கு செக்கனுக்கு 1000 கனஅடி நீர் விடுவிக்கப்படுகின்றது.
கலாவாவியின் வான்கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் கலாஓயாவிற்கு செக்கனுக்கு 6000 கனஅடி நீர் விடுவிக்கப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவத்துள்ளது.
தெதுரு ஓயா, வெஹெரகல, தப்போவ உள்ளிட்ட 50-க்கும் அதிக நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
