2026 ABU வருடாந்த பொதுச்சபை கூட்டம் இலங்கையில்..

2026 ABU வருடாந்த பொதுச்சபை கூட்டம் சிரச ஊடக வலையமைப்பின் தலைமையில் .. - ஆசிய - பசிபிக் ஒலிபரப்பு சங்கம்

by Staff Writer 24-11-2025 | 8:19 PM

Colombo (News 1st) 2026ஆம் ஆண்டின் ஆசிய பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் சிரச ஊடக வலையமைப்பு தலைமையில் கொழும்பில் நடைபெறுமென ஆசிய - பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கம் இன்று(24) அறிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஊடகத்துறையிலுள்ள ஒலிபரப்பாளர்கள், சிரேஷ்ட நிறைவேற்றதிகாரிகள் மற்றும் ஊடக  நிபுணர்கள் உள்ளிட்ட மேலும் பல்வேறு சர்வதேச தரப்பினர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

2026ஆம் ஆண்டின் ஆசிய - பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் 60-இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பூகோல ஊடக நிலைப்பாடு, நவீன தொழில்நுட்பம்,  நிலைத்தன்மை, திறன் மேம்பாடு மற்றும் பொதுமக்கள் சேவை, தொலைத்தொடர்பின் புதிய பரிணாமங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த கூட்டத்தொடரை இலங்கையில் நடத்துவதன் மூலம் நாட்டின் கலாசாரம் தொடர்பில் ஆசிய - பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது.

அவர்களின் வேலைத்திட்டங்களுக்காக இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள செயற்பாட்டு பங்களிப்பை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்மூலம் ஏற்படவுள்ளது.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் MTV/MBC நீண்ட காலமாக ஆசிய - பசுபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக செயற்படுகின்றது.

இந்த பொதுச்சபை கூட்டத்தின் விருந்தோம்பல் பங்களராக Cinnamon Life City of Dreams தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துரையாடல்கள், நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தாடல் நிகழ்வுகள், செயலமர்வுகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் ஊடக எழுத்தறிவு ஆகிய தலைப்புகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.