இஸ்ரேலில் கொல்லப்பட்டவர் தொடர்பாக விசாரணை

இஸ்ரேலில் கழுத்து வெட்டி கொல்லப்பட்டவர் தொடர்பாக விசாரணை

by Staff Writer 15-11-2025 | 7:27 PM

Colombo (News1st) இஸ்ரேலில் கொலை செய்யப்பட்ட தரிந்து ஷானக எனும் நபரின் சடலம் தடயவியல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவியின் எழுத்துமூல அனுமதிக்குப் பின்னர் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டு சடலத்தை இறுதிக் கிரியைகளுக்காக இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் தொடர்பான தகவல்கள் வௌியிடப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் குழுவின் பிரதானி உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் மற்றும் இலங்கை தூதரக அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே சம்பவம் தொடர்பாக டெல் அவிவ் நகரில் நேற்று(14) கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட தரிந்து ஷானகவுடன் பணிபுரிந்த 2 இலங்கையர்களும் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டார்.

அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்களது தங்குமிடத்தில் 13 இலங்கையர்கள் இருந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட இலங்கையர்கள் இருவர் அவர்களது தங்குமிடத்தை அண்மித்த பூங்காவில் இரவு 11 மணியளவில் மதுபானம் அருந்தியுள்ளனர்.

தரிந்து ஷானக பூங்காவின் எல்லைக்குச் சென்ற போது மற்றுமொரு நபருடன் மோதலை  ஏற்படுத்திக்கொண்ட குரல் கேட்டதாகவும் தாம் மீண்டும் தங்குமிடத்திற்கு சென்று இலங்கை நண்பரொருவரை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை அடைந்த போது தரிந்து ஷானக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் இலங்கையர் கூறியுள்ளார்.

காலியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய  தரிந்து ஷானக கடந்த செப்டெம்பரில் இஸ்ரேலுக்கு சென்று நிர்மாணத் துறையில் பணியில் இணைந்துள்ளார்.