பரீட்சைக்காக விசேட போக்குவரத்து சேவை

உயர்தரப்பரீட்சையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

by Staff Writer 10-11-2025 | 11:43 AM

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி முகாமையாளர் ரீ.எச்.ஆர்.ரீ.சந்திரசிறி தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகள் காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் இடம்பெறுவதால் சிசுசெரிய சேவையை  பரீட்சை காலங்களில் முன்னெடுக்க முடியாதெனவும் அதற்கு பதிலாக விசேட போக்குரவத்து சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக கிராமப்புறங்களில் ஏனைய நாட்களைவிட பரீட்சை காலங்களில் கூடுதல் பஸ் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி முகாமையாளர் ரீ.எச்.ஆர்.ரீ.சந்திரசிறி கூறினார்.

இது தொடர்பாக நாடளாவிய ரீதியிலுள்ள 107 டிப்போக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு ஏற்ப இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு தாமதமும் இன்றி ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.