.webp)

Colombo (News 1st) 2022 மே மாதம் காலிமுகத் திடல் 'கோட்டாகோகம' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் இன்று(04) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி சஜித் பண்டார மன்றில் குறிப்பிட்டார்.
2022 மே 09ஆம் திகதி காலிமுகத் திடல் 'கோட்டாகோகம' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் போது அதனை தடுப்பதற்கு தவறியமை, சட்டத்தை நடைமுறைப்படுத்தாமையினூடாக பொலிஸார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு தெரிவித்து போராட்டக்காரர்கள் சிலர் தாக்கல் செய்த 05 அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தாக்குதல் தொடர்பில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் சட்ட மாஅதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக எந்த சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளீர்கள் என பிரதம நீதியரசர் அரச தரப்பு சட்டத்தரணியிடம் இதன்போது வினவினார்.
குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பிரதம நீதியரசரின் கேள்விக்கு அரச தரப்பு சட்டத்தரணி பதிலளித்தார்.
அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸார் பொறுப்பின்றி செயற்பட்டமையால் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கூறினார்.
சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் போராட்டக்களத்தில் கணிசமான அளவு பொலிஸாரும் இருந்ததாகவும் நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
எனினும் அவை சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் கடமைகளைப் புறக்கணித்தமை தொடர்பில் அப்போது சம்பவ இடத்திலிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
