.webp)

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிருக்கான உலகக் கிண்ணத்தை இந்தியா முதல்தடவையாக சுவீகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி சாம்பியனானது.
மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் மாபெரும் இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று(02) நடைபெற்றது.
இதில் இந்தியாவும் தென்னாபிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.
இருஅணிகளுமே தமது முதலாவது கிண்ணத்தை சுவீகரிக்கும் முனைப்புடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தமை கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியதொரு விடயமாகும்.
போட்டிக்கான நாணயசுழற்சி மழை காரணமாக 02 மணித்தியாலங்களுக்கு தாமதமானது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் உலக கிண்ணத்தை மைதானத்திற்கு எடுத்து வந்தார்.
போட்டியின் மத்தியஸ்தராக இலங்கையின் மிச்செல் பெரேரா மற்றும் 04ஆவது நடுவராக இலங்கையின் நிமாலி பெரேரா ஆகியோர் செயற்பட்டனர்.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு Smriti Mandhana, Shafali Verma ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.
இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன் முதல் விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
Smriti Mandhana 45 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்ததுடன், Shafali Verma 87 ஓட்டங்களை பெற்றார்.
தீப்தி ஷர்மா அரைச்சதம் கடந்தார்.
Ayabonga Khaka 03 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
299 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு அணித்தலைவி Laura Wolvaardt, டஸ்மின் பிரிட்ஸ் ஜோடி மிகச்சிறந்த ஆரம்பத்தை வழங்கியது.
ஒருபக்கம் தென்னாபிரிக்க விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் அணித்தலைவி லாரா Wolvaardt-இன் திறமையான மற்றும் நிதானமான ஆட்டம் இந்திய வீராங்கனைகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
போட்டியில் சதத்தை பதிவு செய்த லாரா, தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சில் ஏ.பி கவுரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஆட்டம், இந்திய அணிக்கு சாதகமானதாக மாறியது.
இறுதியில் தென்னாபிரிக்க அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 05 விக்கெட்களை கைப்பற்றினார்.
அதற்கமைய 2025 மகளிருக்கான உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிட்டியது.
