கலால்வரி தொடர்பில் புதிய வர்த்தமானி வௌியீடு

கலால்வரி செலுத்தாதவர்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்த புதிய வர்த்தமானி

by Staff Writer 28-10-2025 | 3:10 PM

Colombo (News 1st) மதுபான உற்பத்திக்கான வரி செலுத்தும் கால எல்லை மற்றும் வரியை அறவிடுவதற்கான ஒழுங்குமுறைகளை திருத்தி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இன்று(28) முதல் அமுலாகும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கலால் கட்டளைச் சட்டப்பிரிவு 22-இன் கீழ் ஒவ்வொரு அனுமதிப்பத்திர உரிமையாளரும் உரிய திகதியில் அல்லது அதற்கு முன்னர் வரியை செலுத்த வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் வரி அல்லது கட்டணத்தை முழுமையாக செலுத்தத் தவறிய அனுமதிப்பத்திர உரிமையாளரின் போத்தல் தயாரிப்பிற்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக உரிய திகதியிலிருந்து 90 நாட்களுக்கு மேல் செலுத்த வேண்டிய வரி, கட்டணம் முழுமையாக செலுத்தப்படாவிட்டால் அந்த உரிமையாளரின் அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இடைநிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.