.webp)

Colombo (News 1st) வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் முன்னெடுத்திருந்ததுடன், மேலதிக விசாரணைகளை நிதி குற்ற விசாரணை பிரிவு முன்னெடுக்கவுள்ளது.
வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ் மாஅதிபரின் கீழ் 10 ஆய்வுக்குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மேல் மாகாண தெற்கு பிரதி பொலிஸ் மாஅதிபர், நிதி குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளர், குற்ற அறிக்கையிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
அனுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் நேற்று(26) அதிகாலை பெண் உள்ளிட்ட 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது அங்கிருந்து தப்பிச்சென்றிருந்த துப்பாக்கிதாரி மஹரகம - நாவின்ன பகுதியில் விசேட விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களிடமிருந்த 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம், ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
