ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு

ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் ஆரம்பம்

by Staff Writer 26-10-2025 | 12:46 PM

Colombo (News 1st) ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு தெற்காசியாவின் மிகப்பெரிய கலையக வளாகமான இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று(26) ஆரம்பமானது.

ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கம், ரேடியோ ருமேனியா மற்றும் கெபிட்டல் மகாராஜா குழுமம் இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

ஐரோப்பா மற்றும் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கண்டங்களுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பிற்கான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதே இந்த ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாட்டின் நோக்கமாகும்.

AI எனும் செயற்கை நுண்ணறிவு ஊடகத்துறையில் ஏற்படுத்தும் தாக்கம், சவால் மற்றும் வாய்ப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாடு இடம்பெறுகின்றது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் ஊடகத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த மாநாட்டை ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கம், ரேடியோ ருமேனியா மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

ABU ஊடக மற்றும் கலாசார தின சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமஹேந்திரன், கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் நாயகம் அஹமட் நதீம் மற்றும் தேசிய புலமை சொத்துக்கள் அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி ஹெட்டிஹெலகே ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ரேடியோ ருமேனியா நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி டேன் சென்டா இந்த சர்வதேச மாநாட்டில் இணைந்துகொண்டுள்ளார்.

ரேடியோ ருமேனியா நிறுவனத் தலைவரின் செய்தியை அவர் இங்கு பகிர்ந்துகொண்டிருந்தார்.

02 நாட்களுக்கு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது கவனத்திற்கொள்ள வேண்டிய விதிமுறைகள், ஒழுங்குவிதிகள், படைப்பாற்றல்கள் மற்றும் பொறுப்பு ஆகியன தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது.