.webp)
Colombo (News 1st) நாட்டின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட வளிமண்டல தளம்பல் நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைமை மேலும் வலுவடைந்து நாட்டை அண்மித்து வடமேல் திசையில் நகருமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு, வட மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்படதுடன் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வங்காள விரிகுடாவை அண்மித்து கடற்றொழிலில் ஈடுப்படும் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிங் கங்கையின் பத்தேகம பகுதியை அண்மித்து அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களுகங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா, கிரிந்தி ஓயா ஆகியவற்றை அண்மித்த பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தெதுரு ஓயா மற்றும் மஹ ஓய தொடர்ந்தும் வௌ்ள அபாய மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பலத்த மழையுடனான வானிலை காரணமாக 04 மாவட்டங்களில் 180 குடும்பங்களை சேர்ந்த 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களால் 02 மரணங்கள் பதிவாகியுள்ளன.