பிரதமர் நாடு திரும்பினார்..

சீன விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் நாடு திரும்பினார்..

by Staff Writer 15-10-2025 | 3:00 PM

Colombo (News 1st) சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15) நாடு திரும்பினார்.

சீனாவில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற பெண்கள் தொடர்பிலான உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் சீனாவிற்கு சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ குவாங் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடலில் பிரதமர் ஈடுபட்டிருந்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் ஆகியவற்றின் மூலம் இருதரப்பினருக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்றிருந்த பிரதமர், அங்கு ஹுவாவே டெக்னொலஜிஸ் பிரதிநிதிகள் குழுவினரையும் சந்தித்திருந்தார்.

அத்துடன், இலங்கையில் கல்வித்துறையில் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் வகுப்பறை கருத்து தொடர்பில் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.