.webp)
Colombo (News 1st) கதிர்காமம், மாணிக்ககங்கை வனப்பகுதியில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய காணி இன்று(13) நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.குணசேகர தெரிவித்தார்.
2010 ஜனவரி மாதத்தில் குறித்த காணி மற்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்கள் தொடர்பில் முதல்தடவையாக பத்திரிகையில் செய்தி வௌியானதுடன், அதன் நீர் மற்றும் மின்கட்டணப் பட்டியல்களை வௌியிட்டு அதன் உரிமைத்தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.
கதிர்காமம், டிப்போ வீதி வனராஜா பகுதி, கதிர்காமம் துறைமுக அதிகார சபை விடுமுறை விடுதி - மாணிக்ககங்கை இடையில் அமைந்துள்ள காணியிலேயே இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த காணி நீர்ப்பாசன வனப்பகுதி என்பதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டவிரோதமாக அரச காணியை கையகப்படுத்தி இராணுவ உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை கொண்டு அங்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த கட்டுமானப்பணிகளுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த காணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஸ ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
விசாரணைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்னும் நிறைவுபெறவில்லை.
குறித்த நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடமிருந்த நிர்மாணப்பணிகள் மற்றும் காணியை நீர்ப்பாசன திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆலோசனையை சட்ட மாஅதிபர் வழங்கியதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்திற்கு உரித்தான காணியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிர்மாணப்பணிகளும் அந்த திணைக்களத்திற்கே சொந்தமானது என்ற அடிப்படையில் குறித்த காணி இன்று திணைக்களத்தினால் பொறுப்பெற்கேப்பட்டது.