.webp)
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான டிங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் நெரஞ்சனை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டது.
சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கொச்சிக்கடை ஷிரான் என அழைக்கப்படும் பழனி ஷிரான் க்ளோரியனின் உதவியாளர் என கண்டறியப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் கிரேண்ட்பாஸிலுள்ள மஹவத்த பொதுமயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் இருந்த நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் வந்த காரின் சாரதியாக செயற்பட்டமை, பேலியகொடை ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொலை செய்து மற்றும் மற்றொருவருக்கு காயமேற்படுத்தியமை, சந்தேகநபர்களுக்கு துப்பாக்கிகளை பரிமாற்றியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.