.webp)
Colombo (News 1st) நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் இருந்து இன்று(30) முதல் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நபரொருவர் தமக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான மருத்துவச் சான்றிதழைப் பெற்ற பின்னர் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பல மணித்தியாலங்களாக நீண்ட வரிசையில் காத்திருத்தல், மோசடி செய்யும் நபர்களிடம் சிக்குதல் ஆகிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டு நுகேகொடையிலுள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின், வேரஹெர அல்லது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய அலுவலகங்களுக்கு சென்று அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள நேரிடும்.
மாற்றங்கள் ஏதும் இல்லையெனின், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை இன்று முதல் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும் நாட்களில் சாரதி அனுமதிப்பத்திரத்தை குறித்த நிறுவனத்திலேயே விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.