.webp)
ஆசிய கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
2025 ஆசிய கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் மாபெ ரும் இறுதிப் போட்டி துபாயில் நேற்று(29) நடைபெற்றது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சஹிப்ஸடா பர்ஹான், பகர் ஸமான் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.
சிறப்பாக விளையாடிய சஹிப்ஸடா பர்ஹான், 38 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டங்களை பெற்றதுடன் பகர் ஸமான் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
சாயிம் அயுப் மாத்திரம் 14 ஓட்டங்களை பெற்ற நிலையில் அணியின் 03 வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் சல்மான் அகா 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பாகிஸ்தான் இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
33 ஓட்டங்களுக்குள் 09 விக்கெட்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி, 19. 1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் குல்திப் யாதவ் 04 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஜஸ்பிரிட் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 02 விக்கெட்களை வீழ்த்தினர்.
147 எனும் வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் ஷர்மா, ஷூப்மன் கில் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.
இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா, இறுதிப் போட்டியில் பெரிதாக ஓட்டங்களை குவிக்கவில்லை.
இந்திய அணியின் முதல் 03 விக்கட்டுக்களும் 20 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில், 04 ஆவது விக்கட்டுக்காக இணைந்த சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு வலு சேர்த்தது.
ஷிவம் தூபே 33 ஓட்டங்களை பெற்றார்.
சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய 22 வயதான திலக் வர்மா 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 19 தசம் 4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது.
எவ்வாறாயினும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் பேரவையின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கட் பேரவையின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கிண்ணத்தை பெறுவதை இந்திய அணி நிராகரித்தது.
இதற்கமைய இம்முறை கிண்ணத்தை பெறாமல் இந்திய அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியே களத்தில் நேற்று பதிவான பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளப் பதிவினூடாக அவர் இதனைக் கூறியுள்ளார்.