போலியாக பதிவு செய்யப்பட்ட 2 ஜீப்களுடன் இருவர் கைது

போலியாக பதிவு செய்யப்பட்ட 2 ஜீப்களுடன் இருவர் கைது..

by Staff Writer 13-09-2025 | 6:55 PM

சட்டவிரோதமாக 2 ஜீப்களை இறக்குமதி செய்து போலியாக பதிவு செய்தமை தொடர்பில் வத்தேகம நகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைதாகியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள்  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளை மாற்றியமைத்து பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் இதற்கு திணைக்களத்தின் ஊழியரொருவரின் உதவியையும் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  

கைது செய்யப்பட்ட வத்தேகம நகர சபையின் முன்னாள் மேயரான ரவீந்திர பண்டார 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக தெரிவாகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் சமீபத்தில் காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தவுடன் நெருங்கி செயற்பட்டதாகக் கூறப்படும் லக் ஷித மனோஜ் வீரபாகு என்பவராவார்.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 2 ஜீப்களும் மேலதிக விசாரணைகளுக்காக மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.