எல்ல பஸ் விபத்து தொடர்பான வௌிக்கொணர்வு

எல்ல பகுதியில் விபத்திற்குள்ளான பஸ் தொடர்பான மோட்டார் வாகன போக்குவரத்து தி​ணைக்களத்தின் வௌிக்கொணர்வு

by Staff Writer 11-09-2025 | 7:13 AM

Colombo (News 1st) எல்ல பஸ் விபத்து தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் சில தினங்களுக்குள் வழங்குவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை இன்று(11) அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய, குறித்த பஸ்ஸில் இயந்திரக் கோளாறு காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்திற்குள்ளான பஸ், மேடான பகுதியிலிருந்து வேகமாக பயணித்துள்ளதுடன் அதுவரை 4ஆம் கியரிலேயே பயணித்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து தி​ணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பஸ் வேகமாக பயணித்ததால் அதன் பிரேக் கட்டமைப்பு வெப்பமாகியுள்ளதுடன் அது செயலிழந்துள்ளதாக தி​ணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

விபத்திற்குள்ளான பஸ்ஸின் உரிமையாளர் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளார்.

பஸ்ஸை முறையாக பராமரிக்காமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.