.webp)
Colombo (News 1st) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இணை அனுசரணை நாடுகள் குழு தீர்மானமொன்றை முன்மொழிந்துள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமையைப் பாதுகாப்பதில் உறுதியான நடவடிக்கையை எடுப்பதற்கு இலங்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை கனடா, மலாவி, மாண்டிநீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய இலங்கை இணை அனுசரணை நாடுகள் குழு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்துள்ளன.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் எனும் தலைப்பிலான இந்த தீர்மானம், முந்தைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரை அடிப்படையாகக் கொண்டதும் தீர்க்கப்படாத மனித உரிமை மீறல்கள், நிர்வாகத் தோல்வி மற்றும் நாட்டில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான தேவை தொடர்பில் சர்வதேசத்தின் கரிசனையைக் குறிக்கின்றது.
2024, 2025ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியமையை வரவேற்கும் அதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்திற்கு அமைய அரசியல் அதிகாரத்தை மேலும் பரவலாக்க வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகின்றது.
பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கான முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, ஊழல், இராணுவமயமாக்கல், தண்டனையிலிருந்து விலக்களித்தல், பொறுப்புக்கூறலின்மை போன்ற மூல காரணங்களை கவனத்திற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மேற்கொண்ட மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயன்முறையின் அவசியத்தை இந்த தீர்மானம் வலியுறுத்துவதுடன், முக்கிய வழக்குகளின் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணையையும் இது வலியுறுத்துகின்றது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அதை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தமையையும் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, இந்த சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்கள் தொடர்கிறது என்ற வகையில் அதனை தடை செய்யவும் அதனை இரத்துச் செய்யும் செயற்பாட்டை துரிதப்படுத்தவும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்டத்துடன் இணங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கு ஒரு குழுவை நியமித்தமையைும் வரவேற்கும் அதேவேளை, இந்தச் சட்டத்தின் மேற்பார்வை, குற்றங்கள் மற்றும் அமுலாக்கல் அதிகாரங்களின் விரிவான வரையறைகள் இல்லாமையை கவனத்திற்கொள்வதோடு கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சட்டத்துடன் முழுமையாக இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் அதில் திருத்தத்தை துரிதப்படுத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.
இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாத காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், மனிதப் புதைகுழி விவகாரம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை வலுப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் ஆதரவு ஆகிய விடயங்களையும் இந்த தீர்மானம் மேற்கோள் காட்டுகின்றது.
இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்தவும் 66ஆவது கூட்டத்தொடரில் இவை தொடர்பான எழுத்துமூல மற்றும் வாய்மொழி மூல உயர் அறிக்கையை வழங்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்துகின்றது.