.webp)
Colombo (News 1st) தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.
இது தொடர்பில் 17/2005 மற்றும் 2005 ஒக்டோபர் 05ஆம் திகதி அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண சபை பிரதான செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள், கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தௌிவுபடுத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என ஆணைக்குழுவின் சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்குட்பட்டு வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய மீள மேன்முறையீடு செய்யும் நடைமுறை இல்லை எனவும் மேன்முறையீட்டை சமர்ப்பித்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாவிட்டால் அதற்கு எதிராக ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிறுவனங்களும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.