Lunch Sheets பயன்பாட்டை தடை செய்யுமாறு பரிந்துரை

Lunch Sheets பயன்பாட்டை தடை செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பரிந்துரை

by Bella Dalima 08-12-2023 | 3:38 PM

Colombo (News 1st) சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு Lunch Sheets பயன்படுத்துவதை தடை செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல், மீள்சுழற்சி செயன்முறையை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் கூடியது.

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை சுங்கம், கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, நாட்டில்  Lunch Sheets பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றில் காணப்படும் புற்றுநோய்க் காரணி மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

சுற்றாடல் சட்டத்தைத் திருத்துவதற்காக தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு விசேட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.