சாய்ந்தமருதில் மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

by Bella Dalima 07-12-2023 | 7:33 PM

Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் ஜனாஸா இன்று (07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் கூறினர்.

சாய்ந்தமருதில் மத்ரஸா ஒன்றில் பயின்று வந்த காத்தான்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன், நேற்று முன்தினம் (05) மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுவனின் உயிரிழப்பையடுத்து, பொதுமக்கள் மத்ரஸாவை சுற்றிவளைத்தனர். இதனால் மத்ரஸாவின் நிர்வாகியை பொலிஸார் அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவர் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.

சிறுவனின் பிரேதப் பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, ஜனாஸா பெற்றோரிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டது.

மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது உறவினர்களும் கிராமத்தவர்களும் கூறினர். 
 
காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதே பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.