4 பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

யாழ்.சிறையில் இளைஞர் உயிரிழப்பு: 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

by Staff Writer 04-12-2023 | 6:56 PM

Colombo (News 1st) யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த​ போது 28 வயதான இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் இன்று(04) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு இன்று உட்படுத்த கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, யாழ்.நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்றைய அடையாள அணிவகுப்பு இடம்பெறவிருந்த நிலையில், வழக்கின் முதலாவது சாட்சியாளர் மன்றில் ஆஜராகாமையால் அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 09 மணிக்கு நடத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் இளைஞரின் உயிரிழப்பின் போது கடமையிலிருந்த மேலும் 07 உத்தியோகத்தர்களிடமும் நாளை(05) பகல் 02 மணிக்கு மரண சாட்சி விசாரணை நடத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வேந்திரன் மேனன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் மரண சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.