பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை தொடருமாறு உயர்நீதிமன்றம் அறிவிப்பு

by Staff Writer 04-12-2023 | 3:22 PM

Colombo (News 1st) பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் இன்று(04) அறிவித்துள்ளது.

முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவந்த போதே உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று(04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, முவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமது தோட்டம் உள்ளடங்களாக அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு 200 வருடங்களாக கிடைக்காதுள்ள முகவரியை பெற்றுக்கொடுக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.