சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 03-12-2023 | 3:50 PM

Colombo (News 1st) கல்முனை சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் பராமரிப்பாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன், ஆலயமொன்றிலிருந்த பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 16 ஆம் திகதி கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் கடந்த 17 ஆம் திகதி சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சிறுவர் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த சிறுவன் உயிரிழந்ததாக நன்னடத்தை நிலையத்தினால் கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

கடந்த 29 ஆம் திகதி பெண் பராமரிப்பாளரால், சிறுவன் தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, கல்முனை நீதவானின் உத்தரவிற்கு அமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக
அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர், சிறுவனின் சடலம் நேற்றிரவு(02) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் பராமரிப்பாளரும் தாம் சிறுவனை தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.