போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

by Bella Dalima 01-12-2023 | 3:32 PM

Colombo (News 1st) போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.  

மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். 

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வௌியிட்ட பின்னர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வௌிநாடு சென்றிருந்தார். 

வௌிநாடு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் சென்றிருந்தார். 

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வௌிநாட்டில் இருந்தவாறே தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டை சமர்ப்பித்திருந்தார். 

மேன்முறையீட்டை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர் நாடு திரும்பி 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களம் சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. 

குறித்த உத்தரவிற்கமைய, நேற்று முன்தினம் (29) நாட்டிற்கு வருகை தந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களம் சென்று வாக்குமூலம் வழங்கியிருந்தார்.