டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

by Bella Dalima 01-12-2023 | 6:54 PM

Colombo (News 1st) டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

புதிய விலைத்திருத்தத்திற்கு அமைவாக, ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 329 ரூபாவாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

இந்த எரிபொருள் விலைத்திருத்தம் பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்கு போதுமானதல்ல என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இதனிடையே, ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும், அவ்வாறான பொறிமுறையொன்று நடைமுறையில் காணப்படவில்லை எனவும் முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்குபடுத்தலை அறிமுகப்படுத்தி, முறையான கட்டண பொறிமுறையின் கீழ் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ் கட்டணங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், VAT அதிகரிக்கப்பட்ட பின்னர் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிக்குமெனவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.