.webp)
Colombo (News 1st) இன்று (டிச. 1) உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 5500 பேர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 3032 பேர் தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவில் பதிவு செய்து சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
கடந்த வருடத்தில் 427 HIV தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் கடந்த ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 485 பேர் HIV தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 79 பேர், 15 தொடக்கம் 24 வயதிற்குட்பட்ட இளம் சமுதாயத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் தற்போது HIV தொற்றை அடையாளங்காண்பதற்காக Rapid பரிசோதனை முறைமை பயன்படுத்தப்படுவதாகவும் இதற்காக சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே செல்வதாகவும் தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எவரேனும் ஒருவர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாமென கருதினால், இலவசமாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் குறித்த நபரின் இரகசியத்தன்மை பேணப்படுமெனவும் தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பரிசோதனை நிலையங்களுக்கு வருகை தர விருப்பமில்லாமல், தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விரும்புவோருக்காக சுயபரிசோதனை கருவியை அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை www.know4sure.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
''சமூகத்தை வலுப்படுத்துவோம்'' என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
எய்ட்ஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் உரிமைகளை மதிக்க ஏனையோரை பழக்கப்படுத்தல் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
சில கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றுக்கு எதிராக இரத்த வௌ்ளை அணுக்கள் போராடி
உடலினை பாதுகாக்கின்றன.
HIV வைரஸ் உடல் நோய் எதிர்ப்பு கட்டமைப்பிற்குள் நுழைந்தால், வௌ்ளை இரத்த அணுக்களின் செயற்பாடுகள் இடம்பெறாது தடுக்கப்படுகின்றது.
பாதுகாப்பற்ற பாலியல் ரீதியான உறவுகளின் மூலம் உருவாகும் HIV வைரஸ், அடையாளம் காணப்படாது நீண்ட காலம் சிகிச்சை மேற்கொள்ளப்படாதிருந்தால், அதன் காரணமாக ஏற்படும் நோய் எய்ட்ஸாக அடையாளப்படுத்தப்படுகின்றது.