.webp)
Colombo (News 1st) ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள உத்தேச VAT அதிகரிப்பினால் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் இன்று (01) தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
விவசாயத்துறை சார்ந்த பொருட்களுக்கு வரி நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தமது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில், விவசாயத்துறை வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுவதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை விவசாயத்துறைக்கு வரி விதிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் அந்த நிலைமையை பேணுவதன் மூலமே விவசாயத்துறையை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் எனவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த விவசாயத்துறை, தற்போது வழமைக்குத் திரும்பி வரும் சந்தர்ப்பத்தில், விவசாயிகளுக்கான சலுகைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.