.webp)
Colombo (News 1st) வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் மீண்டும் நீடிக்கவுள்ளது.
அதற்கமைய, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள Mines Advisory Group எனப்படும் MAG மற்றும் HALO Trust நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 23 கோடியே 80 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
இதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki , Mines Advisory Group நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan, HALO Trust நிறுவனத்தின் நிகழ்ச்சி முகாமையாளர் Stephen Hall உள்ளிட்டோர் நேற்று முன்தினம் (27) கைச்சாத்திட்டுள்ளனர்.
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த தொகை 44 மில்லியனுக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வட மாகாணத்தில் 202.15 சதுர கிலோமீட்டர் பரப்பில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான கேர்ணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் மேலும் 21.76 சதுர கிலோமீட்டரில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.