நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆவது இயந்திரம் இன்று(29) தேசிய கட்டமைப்புடன் இணைப்பு

by Staff Writer 29-11-2023 | 8:01 AM

Colombo (News 1st) பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்னுற்பத்தி இயந்திரம் இன்று(29) தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் நொயெல் ப்ரியந்த குறிப்பிட்டார்.

இதனிடையே, தொழிநுட்பக் கோளாறு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின்னுற்பத்தி இயந்திரத்தை, எதிர்வரும் 16 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான வானிலையினால் நாளாந்த மின்னுற்பத்தியில் 65 வீதம் நீர்மின்சாரத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த சில நாட்களிலேயே அதிகளவிலான நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தமது அதிகாரசபைக்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவின் 88 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

நீர்மின் உற்பத்திக்காக அதிகளவிலான நீர் தற்போது விடுவிக்கப்படுவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.