ஆறாவது நாளாக பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

காஸாவில் போர் நிறுத்தம்: ஆறாவது நாளாகவும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

by Bella Dalima 29-11-2023 | 4:14 PM

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதால், நேற்று (28) ஐந்தாவது நாளாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

10 இஸ்ரேலியர்களையும் 2 வெளிநாட்டினரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து, அவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல், நேற்று இஸ்ரேல் தரப்பில் சிறைகளில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று ஆறாவது நாளாகவும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். 

அதற்கான பெயர் பட்டியல் இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

பாலஸ்தீன் - காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதல்கள் காரணமாக  14,000-இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சுமார் ஒன்றரை மாத தாக்குதல்களுக்கு பிறகு இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. 

ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதேபோல், இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு விடுவித்து வருகிறது. 

4 நாள் போர் நிறுத்த முடிவில் 50 இஸ்ரேலியர்கள், 19 வெளிநாட்டினர் என 69 பேர் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.