சிறையில் இளைஞர் உயிரிழப்பு: நீதிமன்ற உத்தரவு

யாழ்.சிறைச்சாலையில் இளைஞர் உயிரிழப்பு: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

by Staff Writer 28-11-2023 | 7:07 AM

Colombo (News 1st) யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்.நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாகராஜா அலெக்ஸ் எனப்படும் குறித்த இளைஞரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இரண்டாவது நாளாகவும் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. 

நேற்று நடைபெற்ற விசாரணையில், 6 முதல் 11 வரையான சாட்சிகள் மன்றில் தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.

குறித்த இளைஞரின் தந்தை, சிறைச்சாலையில் அந்த இளைஞருடன் தடுத்து வைக்கப்படிருந்த சந்தேகநபர், உள்ளிட்டோர் நேற்று சாட்சியமளித்திருந்ததாக இளைஞர், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். 

இதனையடுத்து யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தொடர் மரண விசாரணைக்காக டிசம்பர் முதலாம் திகதி பிற்பகல் 01.30 வரை தவணையிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.