உக்ரைனில் கடும் பனிப்புயல்: 10 பேர் பலி

உக்ரைனில் கடும் பனிப்புயல்: 10 பேர் பலி, குழந்தைகள் உட்பட 23 பேர் காயம்

by Bella Dalima 28-11-2023 | 4:28 PM

Ukraine: உக்ரைனில் பனிப்புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை  10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள் விவகார அமைச்சர் Ihor Klymenko இன்று (28) குறிப்பிட்டுள்ளார். 

பனிப்புயலால் தெற்கு உக்ரைனின் குறிப்பாக Odesa பிராந்தியத்தின் கருங்கடல் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மேலும், புயலில் சிக்கிய வாகனங்களை மீட்க பொலிஸார் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். 

மோசமான வானிலையின் விளைவாக, Odesa, Kharkiv, Mykolaiv மற்றும் Kyiv பகுதிகளில் 10 பேர் இறந்துள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் உட்பட  23 பேர் காயமடைந்துள்ளதாகவும்  Ihor Klymenko தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

11 பிராந்தியங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களை பனியில் இருந்து மீட்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

வானிலை காரணமாக ஐந்து பேர் இறந்த Odesa பிராந்தியத்தின் ஆளுநர் Oleh Kiper, பனியில் சிக்கிய சுமார் 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 

24 பேருந்துகள் மற்றும் 17 ஆம்புலன்ஸ்கள் உட்பட 849 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தமது பிராந்தியத்தில்  300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் ஆளுநர் Oleh Kiper தெரிவித்துள்ளார்.