.webp)
Colombo (News 1st) பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 40 நாட்கள் கடந்தும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற உர மானியம் இதுவரையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
உரத்தை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுவதற்காக 1000 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் அண்மையில் தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அதிகளவான நிதி விடுவிக்கப்பட்டது.
306.6 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மட்டக்களப்பின் பல பகுதிகளில் விவசாயிகளுக்கு இந்த தொகை இன்னும் கிடைக்கவில்லை.
விவசாயிகளுக்கு வழங்குவதாக தெரிவித்த உர மானிய தொகை தங்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மட்டக்களப்பு - பண்டாரியாவெளி விவசாயிகள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் பிரதி பணிப்பாளர் கே.ஜெகன்நாத்திடம் வினவிய போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 25 வீதமானவர்களுக்கு எதிர்வரும் வாரத்தில் அதனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயிகள் தங்களின் தகவல்களை முறையாக வழங்காமையினாலே நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.