.webp)

Colombo (News 1st) நேபாளத்தில் இன்று (03) அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவை டெல்லியிலும் உணரப்பட்டுள்ளன.
நேபாளத்தில் 25 நிமிடங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
அவை பிற்பகல் 2.25 மணிக்கும் 2.51 மணிக்கும் ஏற்பட்டுள்ளதுடன், 4.6 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகின.
இதனையடுத்து, 15 நிமிடங்கள் கழித்து 3.1 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் 13 நிமிடங்கள் கழித்து 3.1 மெக்னிட்யூட் ரிக்டர் அளவில் நான்காவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் திபாயல் நகருக்கு வடகிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கங்களை உறுதிப்படுத்தி உள்ளது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (National Centre for Seismology,) கூற்றுப்படி, அருணாச்சல பிரதேசத்தில் மாலை 3.27 மணிக்கு 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் உத்தரகாண்டில் சில நிமிடங்களுக்குப் பிறகு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் டெல்லியிலும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.
குறிப்பாக, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ, நொய்டா, ஹரியானாவின் சோனிபட் ஆகிய நகரங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
