.webp)
Colombo (News 1st) முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகலுக்கான காரணத்தையும் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறும், நீதிபதிகளினதும், நீதிமன்றத்தினதும் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிச் சேவைகள் சங்கம் நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்திற்காக தாம் தொடர்ச்சியாக முன்னிற்பதாக, மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளின் தொழில்சார் சங்கமான நீதிச் சேவைகள் சங்கம், நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் பிரதிகள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் ஒரே தடவையில் எழுந்தமாக ஏற்பட்ட ஒன்றல்ல என, நீதிச் சேவைகள் சங்கம், நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது படிப்படியாக அதிகரித்த, நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட திட்டத்தின், எதிர்பார்க்கப்பட்ட விளைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்மானத்தின் காரணமாக தமக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலினால் அவசரமாக கடிதத்தை அனுப்பிவிட்டு நீதிபதி நாட்டை விட்டு வௌியேறுவாராயின், அந்த நாட்டில் நீதித்துறையின் மீதான நம்பிக்கை இழக்கப்படுவதையும் எளிதில் மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் நீதிச் சேவைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.