பக்கசார்பற்ற விசாரணை அவசியம் - BASL

நீதிபதி T. சரவணராஜா இராஜினாமா: பக்கசார்பற்ற விசாரணை அவசியம் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

by Staff Writer 30-09-2023 | 7:04 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதித்துறை சார்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் தாம் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அச்சுறுத்தல் அல்லது தலையீடுகள் இன்றி தமது கடமைகளை ஆற்றக்கூடிய வகையிலான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமென்பதில் தாம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஒரு முழுமையான, பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல்களின் உண்மைத்தன்மையை கண்டறிவது மிகவும் முக்கியமானது எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் உண்மை என கண்டறியப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்படுவது மாத்திரமன்றி, நீதித்துறை கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் சிதைந்துவிடுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதி T.சரவணராஜாவின் பதவி விலகல் இலங்கையில் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பலாமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதித்துறை சார்ந்தவர்கள் மீதான எந்தவொரு அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

சட்ட ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும் நீதித்துறையை பாதுகாப்பது அவசியமென தாம் நம்புவதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்தமை, அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது அதீத கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமென்பதால், தாமும் ஆழ்ந்த கவலையை வௌியிடுவதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்ட ஆட்சி தொடர்பில் எழும் பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு, சுதந்திரம் மற்றும் பக்கசார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தி, இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவது இன்றியமையாதது என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது என்பதால், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விசாரணை முடிவுகளையும் தாமதமின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.