.webp)
Malaysia: மலேசியா - சென்டுல் (Sentul) பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் Klang-இல் தலைமறைவாகியிருப்பதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருவரும் இருப்பதாக தாம் நம்புவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் கோலாலம்பூர் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் உத்தியோகத்தர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.
கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரின் பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை கூடிய விரைவில் நிறைவு செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் - சென்டுல் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மூன்று இலங்கை பிரஜைகள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் இரு இலங்கை பிரஜைகள் தேடப்பட்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட 03 இலங்கையர்களும் ஆண்கள் என்பதுடன், அவர்களது கை, கால்கள் கட்டப்பட்டு தலை பிளாஸ்டிக் பைகளால் மூடிய நிலையில் காணப்பட்டதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த தம்பதியினரால் 06 மாதங்களுக்கு முன்னதாக வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த வீடொன்றில் இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையாளிகள் இருவரும் தம்பதியினருக்கு நன்கு தெரிந்தவர்கள் என்பதுடன், கொலை இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களில் தம்பதியினரின் மகனும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.